ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நேற்று 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள். இதில் தமிழகம் முழுக்க சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 22-ம் தேதி ஒவ்வொரு தாலுகா தலைமையிடத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று மறியல் போராட்த்தில் ஈடுபட்டனர். 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஆசிரியர்கள், மற்றும் அணைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 12 ஊர்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஏழாயிரம் பெண்கள் உட்பட 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு சாலை மறியல் செய்தனர்.
போலீசார் அரசு ஊழியர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர் பிறகு மாலை 6 மணிக்கு அனைவரையும் விடுவித்தனர். மறியல் போராட்டம் இன்றும் தமிழகம் முழுக்க நடத்தவுள்ளனர். தொடர்ந்து 25-ம் தேதி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் பத்தாயிரம் இருபதாயிரம் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு மெகா மறியல் போராட்டத்தை நடத்த உள்ளார்கள்.