Skip to main content

சேலத்தில் சக்கை போடு போடும் போதை மாத்திரை கும்பல்; பிடிபட்ட அதிர்ச்சி தகவல்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Salem addiction pills

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள், உடல்  உழைப்புத் தொழிலாளர்கள் கள், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட மாற்று போதைப் பொருட்களைத் தேடிச்செல்கின்றனர். குறிப்பாகச் சேலத்தில் இளைஞர்கள் அண்மைக் காலமாக போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. தூக்க மாத்திரைகள், ஆல்கஹால் அதிகமுள்ள சிரப் வகை  மருந்துகள், வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. ஆனாலும் விதிகளை மீறி சில மருந்துக் கடைகளில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு  வருவது தொடர்கிறது.

மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது மருந்து கடைகளில் சோதனை நடத்தி, விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும்,  இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இந்நிலையில், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் நான்கு சாலை பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், சேலம் செவ்வாய்ப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(22),  தட்சணாமூர்த்தி(22), வீரபாண்டி ராஜ வீதியைச் சேர்ந்த அர்ஜூனன்(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள், நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள மருந்து விற்பனை பிரதிநிதிகள் சிலரிடம் நேரடியாக வலி நிவாரணி மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி போதைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றைக்  கூலித்தொழிலாளர்கள், இளைஞர்களைக் குறி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனையும் செய்துள்ளனர். பத்து  மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 100 ரூபாய்க்கு வாங்கி, அதை 200 ரூபாய்க்கு விற்று வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900  மாத்திரைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப் பிறகு, சேலம் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் குறித்தும், பிடிபட்ட இளைஞர்களுடன்  வேறு யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர். இளைஞர்களின் புதிய போதைக் கலாச்சாரம், சேலம் மக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி  உள்ளது. 

சார்ந்த செய்திகள்