வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாநகருக்குள், இ-பாஸ் அனுமதியின்றி திருட்டுத்தனமாக நுழைந்த 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பின் ஒரு பகுதியாக, பிற மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு தமிழக அரசின் இ-பாஸ் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் அனுமதி பெற்று, மற்ற இடங்களிலிருந்து இருந்து சேலம் மாநகருக்கு வருபவர்களிடம், மாநகராட்சி எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சோதனைச்சாவடிகளில் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, அவர்கள் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகம், ஐ.ஐ.ஹெச்.டி. கல்லூரி வளாகம், அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தும் முகாம்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்முடிவுகள் வந்த பிறகே மாநகர பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா பாசிட்டிவ் எனத்தெரிய வந்தால், உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இ-பாஸ் அனுமதியின்றி மாநகர பகுதிகளுக்குள் வருகை தருபவர்கள், மருத்துவ பரிசோதனைக்கு உட்படாமல் தொற்று நோய்த்தடுப்பு பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போர் மீதும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிக்க மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நான்கு மண்டலங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் அனுமதியின்றி, சேலம் மாநகர பகுதிக்குள் நுழைந்தது மட்டுமின்றி, தொற்று நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமலும், மாநகரில் தொற்று பரவும் வகையிலும் செயல்பட்டதாக இதுவரை 55 பேர் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“பொதுமக்கள் தங்கள் குடும்பங்களிலோ, வசிக்கும் பகுதிகளிலோ இ-பாஸ் இன்றி, வெளியிடங்களில் இருந்து யாரேனும் வந்திருந்தால், அதுகுறித்த தகவல்களை உடனடியாக மாநகராட்சி பணியாளர்கள் அல்லது காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.