ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நம்பியூரில் சமூகநலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு 128 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கமும், 240 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இந்த 8 கிராம் தங்கத்தின் விலை, அப்போது நிதி ஒதுக்கிய போது ரூபாய் 32 ஆயிரமாக இருந்தது. ஆனால் தற்போது ரூபாய் 36 ஆயிரமாக உள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றமடைந்து வருவதால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் காலத்தில் கட்டப்பட்ட அனைத்து வீடுகளையும் புதுப்பிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை நிரத்தர பட்டாக்களாக மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
'நாங்கள் சொன்னதால்தான் அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது' என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆனால், இன்று விவசாயப் பயிர்க் கடன் தள்ளுபடி செய்துள்ளது. மனிதநேயத்துடன் நமது அரசு செயல்படுகிறது. பொங்கல் பரிசு ரூபாய் 2,500 வழங்க வேண்டும் என அவர்கள் சொன்னார்களா? நாங்கள் செய்துள்ளோம். ஆட்சியில் இருப்பவர்கள் நாங்கள்; எங்களால் மட்டுமே செய்யமுடியும். தேர்தல் களத்தில் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால், செயல்படுத்த முடியாது. வாக்குகளை மக்களிடம் ஏமாற்றி வாங்கவே அவர்கள் பொய்யான பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
தேர்தலுக்கு முன்பே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் களத்தில் சொன்னார்கள் அத்திக்கடவு அவினாசி திட்டம் கொண்டு வரமுடியாது என்று, ஆனால் தற்போது நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அரசுக்கு 18 ஆயிரம் கோடி நிதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதும் மக்களுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு செய்யும் பல்வேறு பணிகளை மக்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் செல்லுங்கள்" என்றார்.
இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, கோட்டாட்சியர் ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.