சேலம் அய்யந்திருமாளிகை வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் நகைக்கடையில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு 4 வயதில் ஸ்ரீசாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. 6 வயதில் ரித்திஷ் என்ற மகனும் இருக்கிறான்.
கடந்த ஒரு வாரமாக கவிதாவுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. அவரிடம் இருந்து மகன்கள் இருவருக்கும் காய்ச்சல் பரவியது. அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதில், கவிதாவும், ரித்திஷூம் குணமடைந்தனர். ஆனால் சிறுவன் ஸ்ரீசாந்த்துக்கு மட்டும் காய்ச்சல் மேலும் தீவிரம் அடைந்தது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டான். பெற்றோர் என்ன நினைத்தார்களோ, திடீரென்று குழந்தையை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென்று ஸ்ரீசாந்த்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
சிறுவனை தாக்கியது டெங்கு காய்ச்சலா அல்லது பன்றி காய்ச்சலா அல்லது வேறு என்ன வகையான காய்ச்சல் என்பது இன்னும் தெரியவில்லை. மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.