சேலத்தில் கொலை, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலத்தை அடுத்த சின்னனூர் சுக்கம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் முத்து (27). இவரும், கூட்டாளிகளும் சேர்ந்துகொண்டு, குள்ளம்பட்டியைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் என்பவரை, கடந்த ஏப்ரல் 5ம் தேதியன்று கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்ததாக நாடகமாடினர். இந்த வழக்கில் முத்துவும், அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதியன்று, தாதம்பட்டியில் நடந்து சென்று கொண்டிருந்த பூமாலை என்பவரிடம் கத்தி முனையில் 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இந்த வழக்கிலும் முத்துவை கைது செய்த காவல்துறையினர், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் செயல்பட்டு வரும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வீராணம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு), மாநகர துணை காவல் ஆணையர் ஆகியோர் காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட ஆணையர் செந்தில்குமார், ரவுடி முத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, முத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு காவல்துறையினர் நேரடியாக சார்வு செய்தனர்.