சேலத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான ஆட்சேபனை மனுக்கள் மீதான விசாரணைக் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு சேலம் மாவட்ட விவசாயிகள், துவக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், ஆட்சேபனை மனு அளிக்கும் போராட்டம், கடவுளிடம் மனு அளிக்கும் போராட்டம், பட்டினி போராட்டம் என பல்வேறு வடிவங்களில் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி சிலர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இறுதித்தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இவ்வளவு எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு, இத்திட்டத்திற்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. மேடைக்கு மேடை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், இத்திட்டத்திற்கு ஆதரவு தருமாறு பேசி வருவதும் விவசாயிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில்தான், எட்டு வழிச்சாலைக்கு ஆதரவு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் ஒருமுறை சர்வே எண் வாரியாக ஆட்சேபனை மனுக்களை வழங்கினர். அவ்வாறு ஆட்சேபனை மனு அளித்த விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி முதல்கட்டமாக, செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 22, 2019) சின்னகவுண்டாபுரத்தைச் சேர்ந்த ஆட்சேபனை மனு அளித்த 36 விவசாயிகளிடம் விசாரணை நடத்துவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள எட்டுவழிச்சாலைக்கான நில எடுப்பு வருவாய் அலுவலர் குழந்தைவேலு நேரடியாக அவர்களிடம் விசாரணை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதற்காக மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, பூலாவரி, கூமாங்காடு, சித்தேரி, நிலவாரப்பட்டி, ராமலிங்கபுரம், சின்னகவுண்டாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நில எடுப்பு அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர். ஏதேனும் அசம்பாவிதகள் நிகழலாம் எனக்கருதிய காவல்துறை தரப்பு, உதவி ஆணையர் கணேசன், ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரோஜா உள்பட இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே அங்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
விவசாயிகள் ஒட்டுமொத்தமாக விசாரணை அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால் அவர்களை 100 மீட்டர் தொலைவிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒவ்வொரு நபராக விசாரணைக்குச் செல்லுமாறு காவல்துறையினர் கூற, பதிலுக்கு அவர்கள் 'ஒரே நேரத்தில் எங்களை விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த விசாரணையை புறக்கணிப்போம்' என்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில், ''எட்டுவழிச்சாலை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டால், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், தகவல் தெரிவிக்க முடியாது என்று அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர். அப்படியெனில், வழக்கு முடிவடையாதபோது விவசாயிகளின் ஆட்சேபனை மனுக்கள் மீது மட்டும் எப்படி அதிகாரிகள் விசாரணை நடத்த முடியும்?
இந்த திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே ஆட்சேபனை மனு அளித்துள்ளபோது, தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவது கண்டி க்கத்தக்கது. எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக நாங்கள் ஒருபோதும் நிலம் கொடுக்க முடியாது,'' என்றனர். இதன்பிறகு அவர்கள் விசாரணைக் கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இதுவரை இல்லாத நடைமுறையாக வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினரும் இந்த நிகழ்வின்போது வரவழைக்கப்பட்டு இருந்தனர். திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம், முதல்வர் உள்ளிட்ட முக்கிய விஐபிக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டும்தான் வெடிகுண்டு தடுப்புப்பிரிவினரும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவது நடைமுறை. ஆனால், வெகுசாதாரணமாக விவசாயிகள் கலந்து கொள்ள வந்த விசாரணைக் கூட்டத்திற்கும் அந்தப் பிரிவினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கியு பிராஞ்ச் ஆய்வாளர் கோகிலா மற்றும் காவலர்களும் விவசாயிகளின் கருத்துகளை செல்போனில் பதிவு செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, ''எல்லாமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைதானே சார்...'' என சிரித்துக்கொண்டே கூறினர். விவசாயிகளையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கிறது, எடப்பாடி பழனிசாமியின் அரசு என்றனர் விவசாயிகள்.