
சேலத்தில், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த நான்கு மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மருந்து கடைகள், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா? என்பது குறித்து, சீரான இடைவெளியில் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சேலத்தில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குநர்கள் குருபாரதி, அம்முகுட்டி ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். மொத்தம் 50- க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வின்போது, நான்கு மருந்து கடைகளில், மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலும், 'பில்' இல்லாமலும் 'ஓடிசி' வகை பிரிவில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விதிகளை மீறி செயல்பட்டதாக அந்த நான்கு கடைகள் மீதும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் கூறுகையில், ''குறிப்பிட்ட சில வகை மருந்துகள், மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. இந்த விதியை மீறி செயல்பட்டதாக 4 மருந்து கடைகள் மீது, மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டம் 1940- ன் படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது,'' என்றனர்.