சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தங்கையே அக்காவை திட்டமிட்டு கொன்றது தெரியவந்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(35). இவர் சென்னை மின்சார ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி இரவு, தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் ராஜேஸ்வரி வியாபாரம் செய்து வந்துள்ளார். மின்சார ரயில் இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்ற போது ரயிலில் வந்து இறங்கிய பயணிகளுக்கு இடையே ராஜேஸ்வரியும் இறங்கியுள்ளார்.
அப்போது, ராஜேஸ்வரியை பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென்று அவரை வெட்டி விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் விசாரித்து வந்தனர். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவு மூலம் தப்பியோடிய மர்ம நபரை காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக ராஜேஸ்வரியின் தங்கையின் நாகவள்ளி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நாகவள்ளி, ஜெகதீசன், சூர்யா, ஜான்சன், சக்திவேல் ஆகியோரை போலீசார் விசாரித்ததில் நாகவள்ளி சக்திவேல் என்ற இளைஞருடன் முறையற்ற உறவில் இருந்து வந்ததை சகோதரி ராஜேஸ்வரி கண்டித்து வந்ததால் நாகவள்ளி ஆள் வைத்து கொலை செய்தது தெரியவந்தது.