திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சடையாண்டி கோவில் உள்ளது.
இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சடையாண்டிசாமி இந்த ஊரின் காவல் தெய்வமாக இப்பகுதி மக்களால் வணங்கப்படுகிறது. இக்கோவிலில் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் காவல் தெய்வமான சடையாண்டி சாமியை வணங்கி இத்திருவிழாவினை மக்கள் கொண்டாடுகின்றனர். இத்திருவிழாவை முன்னிட்டு சடையாண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து இக்கோவிலுக்குப் பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய 50 ஆடுகளை வெட்டி சமையல் செய்து, திருவிழாவில் கலந்துகொண்ட 500 பக்தர்களுக்குக் கறிவிருந்து கொடுக்கப்பட்டது. இத்திருவிழாவில் அய்யம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.