விழுப்புரத்தைச் சேர்ந்த மணி என்கின்ற மணிகண்டன் அந்த பகுதியில் ஒரு தாதாவாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. இவன் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. எட்டு கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடந்த கொலை வழக்குகளிலும் இவன் சம்பந்தப்பட்டிருக்கிறான்.
சென்னையில் பதுங்கியிருந்த மணிகண்டனை பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு இருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் முகாமிட்டிருந்த போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் சென்னையில் கொரட்டூர் பகுதியில் மணி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் அங்கு சென்று அவன் எங்கிருக்கிறான் என விசாரித்து பிடித்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் போலீசார் கைது செய்ய சென்ற நிலையில், ரவுடி மணிகண்டன் போலீஸ் உதவி காவல் ஆய்வாளர் பிரபுவை கத்தியால் வெட்டி தப்பிக்க முயன்றான். மேலும் போலீசாரை தாக்க முயன்ற ரவுடி மணிகண்டனை தற்காப்பிற்காக போலீசார் சுட்டனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் தாதா மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
தற்போது என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி மணிகண்டனின் உடல் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. காயமடைந்த உதவி காவல் ஆய்வாளர் பிரபுவுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கொரட்டூர் பகுதியில் நடந்த இந்த என்கவுன்டர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.