சென்னை, தியாகராய நகரில் நேற்று (04/11/2022) நடைபெற்ற விழாவில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு அறக்கட்டளையை அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
விழாவில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், பா.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், பெஞ்சமின் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, எஸ்.ஏ.சந்திரசேகர் திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், "எந்தக் கட்சி மேடையிலும் நான் கலந்து கொண்டதே இல்லை. ஈ.பி.எஸ். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் நானே பல இடங்களில், பேட்டிகளில் உண்மையாக கிரிட்டிஸைஸ் பண்ணிருக்கேன். நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்; திட்டியிருப்பீர்கள். அது எல்லாம் நடந்திருக்கும். உண்மையாகவே, நான் நினைத்தேன். திடீர் என்று இவர் சி.எம்-ஆ வந்து உட்கார்றாரே; சி.எம் என்கிற போஸ்ட் மிகப்பெரிய நிர்வாகம் ஆச்சே; தமிழ்நாட்டையே கட்டிக் காக்கணும்; அதே நேரத்தில் கட்சியையும் வளர்க்கணும்.
இவ்வளவு பெரிய பொறுப்பை எப்படி? என்று நினைத்தது உண்மை. இரண்டு விஷயத்தில் நான் சந்தோசப் பட்டேன். கடந்த 15, 20 வருடங்கள் அரசியல் வாழ்க்கையைப் பார்க்கும் போது, ஒரு சாமானியன் முதன் முதலாக, ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த, ஒரு சாமானியன் இந்த இடத்தில் வந்து உட்கார முடிந்தது. அதுக்கே முதலில் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் மேடையில் பேசுவதில்லையே தவிர, அரசியலை உற்று நோக்கிக் கொண்டிருக்கிற சாமானியர்களில் நானும் ஒருவன்.
தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை ஒரே வருடத்தில் நிரூபித்தார் எடப்பாடி பழனிசாமி. நல்லது நடந்தால் பாராட்டலாம். அதில் எந்த தயக்கமும் இல்லை. இவ்வளவு இக்கட்டான நிலைமையில் கூட அவரது முகத்தில் ஒரு ஒரு சிரிப்பு இருக்கும் பாருங்கள். சாதாரண மனிதர்களுக்கே பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் வரும். ஒரு குடும்பத்தில் மனைவி மற்றும் மகனை சமாளிக்கிறதிலேயே பெரிய பிரச்சனைகள் வரும். ஆனால், இவர் முதலமைச்சராக உட்கார்ந்து கொண்டு, வர பிரச்சனைகள் எல்லாம் சிரித்து, சிரித்தே சமாளித்து வருகிறார். அது அவரிடம் நான் ரசித்த உண்மையான விசயம்" எனத் தெரிவித்தார்.