திருவள்ளூர் அருகே இடைத்தரகரிடம் ரூபாய் 7 லட்சம் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி செயலாளர்கள் பணியிலும் முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
![Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/RChkxjccBsM_3Sot9kDfNx3r0Ir9aqqQpV5n_h8vj8k/1581413879/sites/default/files/inline-images/454545_0.jpg)
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம், எல்லாபுரம் உள்ளிட்ட 14 ஒன்றியங்கள் உள்ளன. இங்கே 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கான தேர்வின்போது, இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து , வேலை வாங்கிய 20க்கும் மேற்பட்டோர் , பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணிபுரிந்து வருவதாக, குற்றப்பிரிவு புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விசாரணை நடத்தியதில் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பனஞ்சேரி ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்பவரை குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின்போது இடைத்தரகர் ஒருவர் மூலம் , ஏழு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.
இதேபோன்று பணம் கொடுத்து பணியில் சேர்ந்த மற்ற கிராம நிர்வாக அலுவலர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இந்த நிலையில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிலும், இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்து பலர் வேலையில் சேர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளதால் அது குறித்தும் விசாரணை நடத்த குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.