பதவியை தக்கவைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் செயல்பட்டதன் விளைவு: மாணவி அனிதாவின் மரணம்; விஜயகாந்த்
பதவியை தக்கவைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் செயல்பட்டதன் விளைவே மாணவி அனிதாவின் மரணம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கடின உழைப்பால் +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். +2 தேர்வில், 1176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்க தகுதி பெற்றிருந்தும், 'நீட்' தேர்வு அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்காக அந்த மாணவி உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தினார். ஆனால் மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு, தமிழக அரசின் மெத்தனமான செயல்பாட்டால், மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
மாணவர்களை பற்றி கவலைப்படாமல் தங்களது பதவியும், அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்வதில் தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டதன் விளைவு, இன்று ஒரு உயிர் பறிபோயுள்ளது. நீட் தேர்வை பற்றி மாணவர்களுக்கு தெளிவாக அறிவுறித்தி இருந்தால், இதுபோன்று தற்கொலை ஏற்பட்டிருக்காது.
மேலும் அனிதாவைப் போல சிறு-வயது முதலே மருத்துவ கனவுடன் படித்து வந்த மாணவ, மாணவிகளின் கனவை செயலற்ற தமிழக அரசு மாணவ மாணவிகளின் கனவை சிதைத்துவிட்டது. அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
நினைத்ததை படிக்க முடியாமல் போனதற்காக தற்கொலை தீர்வு அல்ல. இதுபோன்ற விபரீத முடிவுகளை மாணவர்கள் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நிகழ்வுகள் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன்.