Skip to main content

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு; பிப்ரவரி 4இல் முக்கிய உத்தரவு!

Published on 22/01/2025 | Edited on 22/01/2025
TN govt case against the governor Important order on February 4th

தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதகளுக்கு ஒப்புதல் அளிக்காதது, மசோதாக்களை கிடப்பில் போடுவது, அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர் அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இத்தகைய சூலலில் தான், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தை சேர்த்து விசாரிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி. பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவுறுத்தினார். ஆனால், யு.ஜி.சி. பிரதிநிதியை விடுத்து மூன்று உறுப்பினர்களை கொண்ட தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்றும், யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து தேடுதல் குழுவை சேர்க்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “சட்டவிதி இல்லாத நிலையில் தன்னிச்சையாக குழு அமைத்து அதை அரசாணையாக வெளியிட ஆளுநர் கூறுகிறார். துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் சாசன நடைமுறை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஆளுநரின் அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான ஆளுநரின் செயல்பாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், “இந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் முதல் வழக்காக விசாரிக்கப்படும். மேலும் அன்றைய தினமே (04.02.2025) இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்