பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதி செய்த பிறகே, இயக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. குறைபாடுகள் உள்ள பள்ளி வாகனங்களின் பர்மிட் ரத்து செய்யப்படுகிறது.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து, வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக, அனைத்து பள்ளி வாகனங்களையும் முழுமையாக தணிக்கை செய்ய வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
வாகனத்தின் பதிவு சான்று, அனுமதிச்சான்று, ஓட்டுநர் அனுபவம், நிர்வாகத்தினால் நடத்துநர் நியமிக்கப்பட்டதற்கான உத்தரவு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்கள் முழுமையான தரத்துடன் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இம்மாதம் 30ம் தேதிக்குள் அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கை தமிழக போக்குவரத்துறை ஆணையருக்கு சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.