மாநிலத்தின் வளர்ச்சிக்காக கொண்டுவரும் 8 வழி சாலை திட்டத்தை வரவேற்க வேண்டியதுதானே என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தபடவுள்ள சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு, தர்மபுரி மாவட்ட பகுதிகளில் கையகப்படுத்துவதுவதற்காக தர்மபுரி மாவட்ட வருவாய் அதிகாரி மே 29ஆம் தேதி பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த பி.வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு சொந்தமான 1.21 ஹெக்டேர் நிலமும் இந்த திட்டத்திற்கு கையகப்படுத்தப்படுவதாக வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்னிலையில் கடந்த ஜூலை 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இதே போன்ற இரு பொது நல வழக்குகள் தொடரப்பட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப் பட்டுள்ளாதாக அரசு பிளீடர்ட்டி. என்.ராஜகோபாலன் தெரிவித்தார். அந்த வழக்குகளுடன் இணைத்து விசாரிக்கலாமா என மனுதாரரை விளக்கமளிக்க உத்தரவிட்டார்.
இன்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், பிற வழக்குகளுடன் இணைத்து விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தார். அப்போது நீதிபதி கல்யாணசுந்தரம், மாநிலத்தின் வளர்ச்சிக்காக வரும் திட்டங்களை வரவேற்க வேண்டியதுதானே என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரர் தரப்பில் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் பொதுமக்கள், சுற்றுச்சூழல், உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்பதே தங்கள் கோரிக்கை என தெரிவித்தார். மேலும், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
ஆனால் அரசு தலைமை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து நீதிபதி கிருஷ்ணமூர்த்தியின் வழக்கை பிற வழக்குகளுடன் விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரை செய்தார்.