கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிய கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இன்னும் பல கிராமங்கள் மீளமுடியாத நிலையில் பெரும் துயரை சந்தித்து வருகிறது. கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளால் தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கஜா புயல் பாதிப்பால் 46 பேர் உயிரிழந்த நிலையில் நிவாரண பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
குறிப்பாக நாகை மற்றும் வேதாரண்யத்தில் அதன் பாதிப்பும் அதிகமாக உள்ளதால் அதிகமாக சேதமடைந்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு நிவாரண நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் எடுக்க தமிழக அரசு முடிவெடுத்து பணிகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயல் சேத பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி அழகுமணி என்பவரால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையானது மனுவாக கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரிக்கவுள்ளது.