அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, முதலமைச்சர் காணொளி வாயிலாக வெளியிட்ட அறிக்கை உள்ளிட்டவை குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரு காணொளி வாயிலாகப் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “பதில் சொல்ல இயலாத எடப்பாடி, அவர் தான் அமலாக்கத்துறை அதிகாரி போல் இன்று ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறார். குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்க முடியாத நிலை இருக்கிறது என்ற தகவல் கேள்விப்பட்டு உடனடியாக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் என்னையும், எம்.எல்.ஏ. பரந்தாமனையும் நேரில் சென்று அவரைப் பார்த்துவிட்டு தகவல் தரச் சொன்னார். அதன் காரணமாக நாங்கள் அங்கு சென்றோம். அப்போது அவர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. சரி, நாங்கள் உள்ளே போகவில்லை. அவரிடம் எதுவும் பேசவும் இல்லை. அவரது உடல்நிலையை மட்டும் நாங்கள் பார்க்க வேண்டும் அதன் காரணமாக அவரை எங்கள் முன் கொண்டு வந்து நிறுத்த மட்டும் செய்யுங்கள் என்றோம். அதற்கு ஐந்து நிமிடம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு சென்ற அதிகாரிகள் பிறகு ஒரு மணி நேரமாக அங்கு வரவேயில்லை. இதனை நான் அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தேன்.
- “கனிமொழியை சிறையில் சந்திக்காத ஸ்டாலின்... செந்தில் பாலாஜியை சந்திக்கிறார்” - எடப்பாடி பழனிசாமி
- ‘ஏன் சி.பி.ஐ. விசாரணைக்குத் தடை வாங்கினேன்’ - இ.பி.எஸ். விளக்கம்
அவருக்கு ரத்த அழுத்தம் இருக்கும் காரணத்தினால் தான் அவரை சந்திக்க வேண்டும் என்று கேட்டோம். நாங்கள் ரெயிடைப் பற்றி கவலைப்படவே இல்லை. ஆனால் மனித நேயத்துடன் விசாரணை நடத்த வேண்டும். ஒருவரை கைது செய்து 18 மணி நேரம் யாரையும் பார்க்க விடாமல் அவரை துன்புறுத்தி, அவருக்கு இதய கோளாறு ஏற்பட்டது. நல்ல வேளையாக உரிய நேரத்தில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அவர் காப்பாற்றப்பட்டார். இதனை எடப்பாடி நாடகம் என்கிறார்.
இதய நோய் எப்படி வரும் என்று அனைவரும் அறிந்ததே. உதாரணத்திற்கு ஒன்றை சொல்லுகிறேன். இவற்றை எல்லாம் அவர் அறிந்திருக்க நியாயம் இல்லை. காரணம் அவர் நேற்று வந்தவர். நான் நகர் மன்ற உறுப்பினராக இருந்த ஆலந்தூரில், 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஜவஹர்லால் நேருவின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதில் நல்ல உடல் நிலையோடு வந்து பங்கேற்ற எம்.ஜி.ஆர். சிலை திறந்து வைத்தார். இது எங்கள் கட்டடத்திற்கு எதிரிலேயே நடந்தது. மறுநாள் அவர் மார் அடைப்பில் மறைந்தார் இது வரலாறு. அதேபோல் காமராஜர், காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி காலை காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, வீட்டுக்குச் சென்றவர் பிற்பகல் 2 மணி அளவில் மார் அடைப்பால் மறைந்தார். மார் அடைப்பு எப்படி வரும் எவ்வளவு கொடுமையானது என எதுவும் தெரியாதது போல் பேசும் இவர் எப்படி தான் இந்த நாட்டின் முதலமைச்சராக இருந்தார் என்பது தெரியவில்லை” என்று தெரிவித்தார்.