கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிவகாசி கலியமூர்த்தி. மிகவும் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சரண்யா குமார் அதே ஊராட்சியில் துணைத்தலைவராக உள்ளார். இவர் சுமார் ஒரு வருட காலமாக ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் ஏதாவது இடையூறு செய்து வருவதாகவும், இதனால் ஊராட்சியில் அடிப்படை பணிகளைக் கூட செய்ய முடியாத நிலை உள்ளதாக மக்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இந்நிலையில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்பார்வையாளராக காட்டுமன்னார்கோவில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் ஊராட்சி வரவு செலவு கணக்கு குறித்து பேசுகையில் துணைத்தலைவர் சரண்யாகுமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த துணைத் தலைவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை சமூகத்தின் பெயரை கூறி தன் காலில் அணிந்திருந்த காலணியால் அடித்துள்ளார். இதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுக்க தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யாகுமாரை போலீசார் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உத்தரவாதம் கொடுத்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் என்பவரை ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யாகுமார் யாரும் எதிர்பாராத விதமாக 300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில் மூன்று முறை காலணியால் அடித்துள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். துணை வட்டார வளர்ச்சி அலுவலரைத் தாக்கிய துணை தலைவரை வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்'' என்று தெரிவித்துள்ளார்.