
வன்னியனூர் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இடமாறுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டம் நடத்தி வந்த கிராம மக்கள், தங்கள் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம், மேச்சேரி வட்டாரத்துக்கு உட்பட்ட வன்னியனூரில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1962ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், 1 முதல் 8ம் வகுப்பு வரை 245 குழந்தைகள் படிக்கின்றனர்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார் (43). இவருக்கும், இதே பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்த ரவீந்திரநாத் (38) என்பவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதில் சிறப்பாக செயல்பட்டு வந்ததாக தலைமை ஆசிரியர் சிவக்குமாருக்கு உள்ளூர்க்காரர்களும், பாமகவினரும் ஆதரவாக இருந்தனர். ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் களமிறங்கினர். இரு ஆசிரியர்களிடையே ஏற்பட்ட 'ஈகோ' விவகாரம், அரசியல் கட்சிகள் இடையேயான 'ஈகோ' மோதலாக உருவானது.
இதையடுத்து, வன்னியனூர் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமாரை வாழதாசம்பட்டிக்கும், பட்டதாரி ஆசிரியர் ரவீந்திரநாத்தை பள்ளிப்பட்டிக்கும் இடமாற்றம் செய்தனர். இந்நிலையில், தலைமை ஆசிரியர் சிவக்குமாரை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தக் கோரி, வன்னியனூர், பள்ளிப்பட்டி கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, கடந்த ஆக. 26ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்தனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளும், மேட்டூர் பாமக எம்.எல்.ஏ சதாசிவமும் செப். 8ம் தேதி உள்ளூர் மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர்ந்து வீம்பு காட்டினர்.
இரண்டாம் கட்டமாக கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து, புதன்கிழமை (செப். 14) வன்னியனூர் பள்ளிக்கு 165 குழந்தைகள் வந்தனர். எம்.எல்.ஏ சதாசிவம், பள்ளிக் கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து, குழந்தைகளை வரவேற்றார். வியாழக்கிழமை (செப். 15) மாணவர்கள் வருகை 194 ஆக உயர்ந்தது. அடுத்த ஓரிரு நாள்களில் முழு அளவில் மாணவர் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
இது ஒருபுறம் இருக்க, ஆசிரியர் ரவீந்திரநாத்துக்கு பள்ளிப்பட்டியில் எதிர்பபு கிளம்பியதால் அங்கிருந்து கரும்புசாலியூருக்கு மாற்றப்பட்டார். இந்தப் பள்ளியிலும் ஒரு கும்பல் அவருக்கு எதிராக திட்டமிட்டு கம்பு சுழற்றியதால் வேறு வழியின்றி அவரை இல்லம் தேடி கல்வித்திட்ட மேற்பார்வையாளராக மாறுதல் செய்தனர். இந்நிலையில், வாழதாசம்பட்டி பள்ளியில் இருந்து வன்னியனூருக்கு இடமாறுதல் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் ஜெயசித்ரா, தற்போது மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அவரும் விரைவில் பள்ளிக்குத் திரும்புவார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.