
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கடந்த 28 ஆம் தேதி (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். பாஜக மாநில தொழில்துறை பிரிவு தலைவரான கோவர்தனுக்கு உடல்நிலை சரி இல்லாததால் நேரில் சென்று விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் கோவர்தன் நடத்தி வரும் ரெஸ்டாரண்டில் பணம் பரிமாற்றம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு சுமார் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று (04.05.2024) விக்னேஷ் என்பவரின் வீட்டுக்கு நேரில் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அனைவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளிக்கவும் சிபிசிஐடி முடிவு செய்யதுள்ளதாகவும் கூறப்படுகிறது.