வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 16 மாவட்டங்களில் இன்று (21.11.2023) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (21.11.2023) மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. மிகப் பலத்த மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இந்த 4 மாவட்டங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ.வரை ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கன்னியாகுமரி, திருநெல்வேலியில் பலத்த மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை இயல்பான அளவைவிட 80 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோயம்புத்தூரில் 23 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதேபோன்று தேனியில் 21 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது திருநெல்வேலியில் இயல்பான அளவைவிட 47 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் 17 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.