தமிழகத்தில் நேற்று(24.10.2024) டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதோடு, பல அதிகாரிகளிடம் இருந்து பணம் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த அதிகாரிகளில் ஒருசிலரை கையும் களவுமாக பிடித்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர். திருச்சி மாநகர் ஸ்ரீரங்கத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் வாகன உரிமம் பெறுவது, வாகனங்கள் பதிவு செய்வது, எப்.சி போடுவது உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெறவேண்டியுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை, டி.எஸ்.பி.மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை 4 மணிக்கெல்லாம் உள்ளே நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் தற்போது வரை ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திடமிருந்து கணக்கில் வராத ரூ.20,300 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) பவுலின் தெரசா என்பவரிடம் ரூ.40, 200 மற்றும் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் சிலரிடம் என மொத்தமாக கணக்கில் வராத ரூ.69,000 பணம் சிக்கி உள்ளது. அந்த பணத்தைப் பறிமுதல் செய்தபோது வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பு வகிக்கும் பவுலின் தெரசா, “ஆரம்பத்தில் நீங்கள் எப்படி என்னைச் சோதனை செய்யலாம்...” என்று தன்னுடைய இஷ்டத்திற்கு எகிறியுள்ளார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தையும், ஒவ்வொரு சான்றிதழுக்குமான தொகையை குறிப்பிட்டு இணையத்தில் குறிப்பெடுத்து வைக்கப்பட்டிருந்த தொகையும் சமமாக இருந்துள்ளது. அதேபோல் அவரை கடந்த 15 நாட்களாக எப்படி கண்காணித்தோம் என்றும், அவரது கணவர் புகைப்படத்தையும் அதிகாரிகள் காண்பித்துள்ளனர். அதன்பிறகு தான், அவர் தான் தவறு செய்துவிட்டதாகக் கதறி அழுதுள்ளார். அவர் உள்பட அலுவலக கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களும் தாங்கள் தெரியாமல் செய்துவிட்டதாகக் கூறி தங்களை விட்டுவிட வேண்டும் என்று கெஞ்சியுள்ளனர்.
இந்த அதிரடி சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறுகையில், “குறிப்பாக ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்குக் காரணம் கடந்த 25 நாட்களாக இந்த அலுவலகத்தில் மட்டும் பல்வேறு சான்றிதழ்களுக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடம் இருந்தும் பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அதன்பிறகே கடந்த 15 நாட்களாக இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தைக் கண்காணித்துள்ளோம். தற்போது பொறுப்பு வகிக்கும் பவுலின் தெரசா நாள்தோறும், வசூலாகும் பணத்தை மாலை 5.30 முதல் 5.45க்கு ஒவ்வொரு நாளும் டீ கடை, மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், கோவில், என்று ஒவ்வொரு பகுதியில் வந்து நிற்கும் தன்னுடைய கணவரிடம் கொண்டு சேர்க்கும் பணியை இந்த அதிகாரி செய்துள்ளார். அதுவும் தன்னுடைய உதவியாளர் மூலம் கொண்டு சேர்த்தால் சந்தேகம் ஏற்படாது என்று அவர் அதைச் செய்திருக்கிறார்.
அதேபோல் கண்காணிப்பாளர் சோமசுந்தரி அதேபகுதியில் வீடு எடுத்துத் தங்கி பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு வாரமும் திருச்சியிலிருந்து மதுரை மேலூருக்குப் புறப்பட்டுச் சென்று அந்த வாரம் வசூலான பணத்தைப் பட்டியலிட்டு தன்னுடைய கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வருவார். இப்படி இவர்கள் இருவரும் தாங்கள் வசூல் செய்யும் பணத்தை தாங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தங்களுடைய கணவர் மூலம் பணத்தை ஒப்படைத்து வந்துள்ளனர். மேலும் சோமசுந்தரி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை செய்யலாமா என்று கேள்வி எழுப்பியபோது, முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார். இறுதியாக அதற்கு ஒப்புக்கொண்டார்.
பவுலின் தெரசா வழக்கம் போல் நேற்று வசூல் ஆன தொகையை அவர் தன்னுடைய கணவரிடம் கொடுக்காமல் தன்னிடமே வைத்துள்ளார். நேற்று அவரை பணத்தை வாங்குவதற்கு வரவேண்டாம் என்று சொல்லியுள்ளார். இதை அறிந்த நாங்கள் வழக்கமாக அவருடைய கணவர் வரும் நேரத்திற்கு முன்பாகவே சென்று அதிரடியாக சோதனை செய்தோம் என்று கூறினார்கள். ஆனால் இவர்கள் நேரடியாக லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டிருந்தால் கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் இவர்களிடம் கணக்கில் வராத பணம் இருப்பது தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இவர்கள் கைது செய்வதிலிருந்து தப்பித்துள்ளனர். ஆனால் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
வழக்கமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் இதுபோன்ற பண்டிகை காலங்களில் மட்டும் அதிரடி சோதனைகளில் ஈடுபடுவது போல, மற்ற நாட்களிலும் இதுபோன்ற சோதனையில் ஈடுபட்டால் இன்னும் பல லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் களையெடுக்கப்படுவார்கள். லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.