கடன் வாங்கித் தருகிறேன் என ஆசைகாட்டி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த ஒருவரை அதிகாலை 3 மணி அளவில் காரைக்குடி போலீஸாரின் உதவியுடன் கைது செய்துள்ளனர் தெலுங்கானா போலீஸார்.
2018ல் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிங்கோடி பகுதியினைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர், தனது மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளை விரிவுப்படுத்தும் நோக்குடன் வங்கிக் கடனுக்கு அலைந்திருக்கிறார். இவ்வேளையில், இவரது பணத்தேவையை அறிந்துகொண்ட ராஜேஷ் சந்திரன் மற்றும் பெருமாள்ராஜ் ஆகியோர், "தங்களுக்கு தெரிந்த செட்டியார் ஒருவர் பெரிய அளவில் கடன் கொடுப்பதாக ஆசைகாட்டி எஸ்.ஆர். தேவர் என்றழைக்கப்படும் ராஜசேகரை கடன் கொடுக்கும் செட்டியாராக அறிமுகம் படுத்தியுள்ளனர்.
'ரூ.300 கோடி என்பது எளிதான விஷயம். ஆனால் இதற்காக டாக்குமெண்ட் சார்ஜ், முதல் தவணைத் தொகை என அட்வான்ஸ் தொகையாக மட்டும் ரூ.2.70 கோடி கொடுக்க வேண்டுமென' ராஜசேகர் கூற, அதற்கடுத்த சில நாட்களிலேயே ராஜசேகர் கேட்ட மொத்தத் தொகையும் செட்டில் செய்துள்ளார் லட்சுமி நாராயணன். எனினும் நாட்கள் நீண்ட நிலையில் இவர் கேட்ட ரூ.300 கோடி கடன் வரவில்லை. இதனால் கடந்த 2020ம் ஆண்டு, தான் ஏமாந்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார் ராஜசேகரை தேடிவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ராஜசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள எஸ். ராஜசேகர், ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவராகவும், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவர், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் தென்னரசுவை எதிர்த்துப் போட்டியிட்டார் என்பதும், இதற்கு முன்பாக சிவகங்கை திருநெல்வேலி மாவட்டங்களில் இவர் மீது ஆறு பண மோசடி வழக்குகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
படம்: விவேக்