உள்ளாட்சித் தேர்தலிலும் பலரது வேட்பு மனுக்களை நிராகரிக்க தேர்தல் நடத்தும் அதிகாரிகளை வைத்து காய் நகர்த்தி வருகிறார்கள். பல மாதங்களாக வாக்காளர் அடையாள அட்டை வழங்காத நிலையில் அதற்கான அட்டைகளை வழங்கவில்லை. இதனால் புயலில் வாக்காளர் அடையாள அட்டைகளை இழந்துள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள பலரது வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான துரைகுணா என்கிற குணசேகரன் தனது மனைவி கோகிலா முன்மொழிய 12 ந் தேதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அடுத்த நாள் அவருக்கே சந்தேகம் வந்து தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் தனது மனு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். காரணம் குளந்திரான்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு அருகில் உள்ள தீத்தான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்ததாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது விண்ணப்பத்தை நிராகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் கூறும் போது.. துரைகுணா பல வருடங்களுக்கு முன்பு அவரது சொந்த கிராமம் பற்றி எழுதிய ஒரு புத்தகம் பெரியபரபரப்பையும், வம்பு வழக்குகளையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் தனி மரமானார். சமூக ஆர்வலர் என்பதால் குளந்திரான்பட்டு கிராமத்தில் காணாமல்போன ஒரு குளத்தை மீட்டுத்தரச் சொல்லி பல வருடங்களாக அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார். நடவடிக்கை இல்லை. அப்பறம் பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி வசூல் செய்ய துண்டறிக்கை வெளியிட்டு பிறகு நீதிமன்றத்திற்கும் சென்றார்.

இந்த நிலையில் தான் பல வருடங்களாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் சில மாதங்களுக்கு முன்பு குளத்தை கண்டுபிடிக்க ஆட்கள் தேவை என்றும், அதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்துறை வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் அச்சிடப்பட்ட துண்டறிக்கைகள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர் மீது அவதூறு பரப்பியதாக வழக்குபோட்டு சிறைக்கும் அனுப்பினாங்க. ஆனால் அவர் சொன்ன இடத்தில் இருந்த குளத்தை அளந்து கண்டுபிடித்து அதில் இருந்த அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிரை பொக்கலின் வைத்து அழித்துவிட்டு அடையாள கல் நட்டதோட குளம் வெட்டாம போயிட்டாங்க அதிகாரிகள். அதிலிருந்தே அதிகாரிகளுக்கும் அவர் ஊரைச் சேர்ந்த தொழில் அதிபர் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் துரைகுணாவை பிடிக்கல. ஒருகட்டத்தில் உள்ளூர் தொழிலதிபர்களால் என் உயிருக்கு ஆபத்து என்று கூட கறம்பக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில்தான் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததும் குளந்திரான்பட்டு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி (பொது) என்ற போதிலும் 12 ந் தேதி அனைத்து ஆவணங்களுடனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். தனக்கு முன்மொழிபவர்களையும் மிரட்டி திரும்ப பெறவைப்பார்கள் என்பதற்காக தனது மனைவி கோகிலாவை முன்மொழிய வைத்து வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்தார். இப்படி எல்லாத்திலும் எச்சரிக்கையா இருந்தவர் மனுவை தான் இப்படி ஊரை மாற்றி பதிவு செய்திருக்கிறார்கள். இது தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி செய்யப்பட்டிருக்கும்.
ஆனால் பரிசீலனை நாளில் இதை வெளிப்படுத்த அதிகாரிகள் காத்திருந்திருப்பார்கள். ஆனால் இப்படி எல்லாம் நடந்துவிடுமே என்று சிந்தித்த துரைகுணா தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் பார்த்தபோது அப்படியே நடந்துவிட்டதை உறுதி செய்து கொண்டார். இனி புகார், வழக்கு எல்லாம் நடக்கலாம் என்றார்கள்.
தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்கிறதா? அல்லது மேல் அதிகாரிகள் சொல்லி நடத்துகிறார்களா என்பதை அதிகாரிகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.