தேனியில் புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க, கடந்த மார்ச் மாதம், சட்டசபையில் 110 விதியின் கீழ், அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்தின் 6-வது அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமாகும்.
தமிழ்நாடு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லை, சேலம் ஆகிய 5 இடங்களில் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதி, தப்புகுண்டு ஊராட்சியில், ரூ.265 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக 253.64 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, தமிழ்நாடு அரசு, ரூ.97 கோடியே 20 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு, அடிக்கல் நாட்டு விழா நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி மூலம் நடந்தது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, இன்று கட்டுமானப் பணிகள் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தற்காலிகமாக, தேவதானப்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளிக் கட்டிடத்தில் செயல்பட உள்ளது. இதற்கான 2020 - 2021 கல்வி ஆண்டுக்கு, 40 மாணவ மாணவிகள் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதன் மூலம் தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளா மக்களும் பயன்பெறுவார்கள். மேலும் நவீன வகுப்பறை, கட்டிடங்கள், மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான தனித்தனி விடுதிகள், உணவகம், கல்லூரி முதல்வர் குடியிருப்பு விடுதி, கண்காணிப்பாளர் குடியிருப்பு, விருந்தினர் இல்லம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
அத்துடன் கல்லூரியில் நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வக வசதி, பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் தொழில்நுட்ப நிலையங்கள் உள்பட 5 துறைகள் கால்நடை உற்பத்தித் தொழில் நுட்பங்களை விரிவாக்கவும் கால்நடை பண்ணை வளாகம் கால்நடை சிகிச்சை சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கும் வகையிலும் நவீன வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ வளாகம் அமைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆவின், தலைவர் ஒ. ராஜா உள்பட பல அதிகாரிகளும் கட்சிப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.