மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்லூரி படிப்புகளுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த், தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில், ‘கரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைத்துக் கல்லூரிகளும், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி இறுதியாண்டு படித்து வந்த மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதத் தயாராக இருந்த சமயத்தில் கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. தேர்வு நடத்துவதற்கான கல்வியாண்டு காலமும் கடந்துவிட்டது.
தற்போதுள்ள சூழலில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதுவது சாத்தியமில்லாத ஒன்றாகும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து விதமான படிப்புகளுக்கான கல்வியாண்டு காலம் கடந்த பின்னரும், அவர்கள் இறுதித் தேர்வுக்குக் காத்திருக்கின்றனர்.
படிப்பை முடித்த பின்னரும், இறுதி தேர்வை எழுதாமல் காத்திருப்பது, மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படிப்பு போன்ற கல்வியை முடித்தவர்கள், அவர்களுக்கான அமைப்புகளில் பதிவு செய்வது பாதிப்படையும். இதனால், அவர்களின் சீனியாரிட்டி பாதிக்கும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், நோய்த் தொற்றின் உச்சநிலை இன்னும் எட்டவில்லை என்று கூறியுள்ளது. ஜூலை மாத இறுதியில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தினந்தோறும் நோயின் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான கல்லூரிகளின் கட்டிடங்கள், கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இப்போதுள்ள சூழலில், நடப்பு கல்வியாண்டிற்கு, கல்லூரிகள், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற நிலை தெரியவில்லை. அதனால், கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும். முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் அகமதிப்பீட்டு அடிப்படையில் மதிப்பெண் வழங்கி, தேர்ச்சி பெற்றதாக அறிவித்திட வேண்டும்.’ என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.