மேச்சேரி அருகே, கடத்தி வரப்பட்ட 22.50 லட்ச ரூபாய் குட்கா மற்றும் புகையிலை பொருள்கள், லாரி ஆகியவற்றை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வேலப்பம்பட்டியில் சாலையோரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு லாரி நின்று கொண்டிருப்பதாகவும், அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் இருப்பதாகவும் மேச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் இதுகுறித்து சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர் மாரியப்பனுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் விரைந்தனர். மேச்சேரி போலீசாரும் அங்கு வந்தனர். லாரியில் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. அதைப்பிரித்து பார்த்தபோது, உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4.50 டன் குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. 150 மூட்டைகளில் இந்தப் பொருள்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.22.50 லட்சம்.
போலீசார் வருவதை அறிந்ததும், லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மஞ்சுநாதா டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் இருந்த அந்த லாரி கர்நாடகா மாநில பதிவு எண் கொண்டதாக இருந்தது. விசாரணையில், லாரியின் உரிமையாளர் பெங்களூரை சேர்ந்த லக்ஷ்மன் என்பது மட்டும் இப்போதைக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
பிடிபட்ட போதைப்பொருள்கள் எங்கிருந்து ஏற்றப்பட்டது, எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற விவரங்கள் தெரியவில்லை. பெங்களூரில் இருந்து திருச்சி அல்லது கோவைக்குக் கடத்திச்செல்வதற்காக மேச்சேரி வழியாக அந்த லாரி வந்திருக்கலாம் என அதிகாரிகள் யூகிக்கின்றனர். பறிமுதலான லாரியும், சரக்குகளும் மேச்சேரி காவல் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் குட்கா வகையறா வஸ்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றாலும், பெங்களூரில் தங்குதடையின்றி விற்பனை செய்யப்படுவதால், அங்கிருந்து தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் தாராளமாக கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.