தமிழகத்தில் பலதுறைகளிலும் சாதாரண மக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதிகளில் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்காக ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்றால் ஒவ்வொரு பணிக்கும் ஒரு விலை வைத்து வசூல் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆவுடையார்கோவில் வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு ரூ.1,000, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்கும் ரூபாய் 500, 200 என விலை நிர்ணயம் செய்து வசூலித்து வருவதாகப் புகார்கள் எழுந்தது. நேற்று சனிக்கிழமை குடும்ப அட்டைகள் பெயர் திருத்தம் செய்வதற்காக ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 200 லஞ்சம் வாங்கி தன் சட்டைப் பாக்கெட்டில் வைக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கரோனா தொற்றால் 2 வருடமாக வருமானமின்றி அவதிப்பட்ட பொதுமக்கள் தற்போது கரோனா, ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால் சிரமத்தில் உள்ள நிலையில், இது போன்ற லஞ்ச அதிகாரிகளால் ரொம்பவே நொந்து போய் உள்ளனர் பொதுமக்கள்.