ஒருவரை ஒருவர் மோதவிட்டு, இறுதியில் இருப்பவனை முடிக்கின்றது காவல்துறை. இதுதான் செக்க சிவந்த வானத்தின் க்ளைமாக்ஸ். திரைப்படத்தில் எப்படியோ, அதனை நடை முறையிலும் செயல்படுத்தி வருகின்றது தமிழக காவல்துறை என்பதுதான் வேடிக்கையே..!!
கடந்த பத்து நாட்களில் மதுரை மாநகரில் கொடூரமாகக் கொலையானவர்களின் எண்ணிக்கை ஐந்து.! மதுரையைத் தாண்டி மாநிலம் முழுக்க என்றால்..? கொலையுண்டவர்கள் அனைவரும் காவல்துறையால் தேடப்படுவர்களே.! கொலை செய்தது அவர்களது எதிரி தரப்பு, பழிக்கப் பழியாக நடந்திருக்கும் என சாவகாசமாய் வழக்கை மூடுகின்றது காவல்துறை. பழிக்குப் பழியாக கொலைகள் என்றாலும் இதனின் பின்புலத்தில் இருப்பதும் காவல்துறையே என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
தமிழகத்தில் மொத்தக் கூலிப்படைகள் 114 எனவும், மதுரையில் மட்டும் கூலிப்படைகளின் எண்ணிக்கை 25 எனவும் காவல்துறையில் ஒரு செய்தி உண்டு. மாநிலத்தில் எங்கு கொலை நடந்தாலும் அதில் மதுரை மற்றும் நெல்லை கும்பலுக்கு தொடர்பிருக்கிறது கண்கூடான ஒன்று. அதில் ஈடுபடும் கும்பல் மதுரையைப் பொறுத்தவரை வில்லாபுரம், கீரைத்துறை, அண்ணாநகர், திடீர் நகர், கரிமேடு, செல்லூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கட்டப்பஞ்சாயத்து செய்வது, ஆட்களை கடத்தி பணம் பறிப்பது, தொழிலுக்கு இடையூறாக இருந்தால் "போட்டு' தள்ளுவது என இவர்களின் "பணி' இருந்தது. இதில் சிலர், அரசியல்வாதிகளின் நட்பை பெற்றதால், அரசியல் கொலைகளை செய்ய ஆரம்பித்தனர். அதில் முன்னாள் அமைச்சர்கள் ஆலடி அருணா, கிருஷ்ணன் ஆகியோர் "வாக்கிங்' சென்றபோது, கூலிப்படையால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் ராமஜெயத்தையும் மதுரை கூலிப்படையே கொன்றிருக்கக்கூடும் என சந்தேகம், இன்னும் காவல்துறை மத்தியில் நீடிக்கிறது.
"தமிழகத்திலுள்ள “கூலிப்படையினரை கண்காணிக்க” டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி. தலைமையில் தனியாக OCU எனப்படும் ஒரு பிரிவு இயங்கி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் இந்த OCU போலீஸ் அதிகாரிகள், கூலிப்படையினரின் நடமாட்டம் குறித்தோ, ஆங்காங்கே நடக்கும் கூலிப்படைகளின் கொலை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதே அவர்களின் வேலை. மதுரையைப் பொறுத்தவரை இந்த OCU பிரிவு கூலிப்படையினரின் லிஸ்டை தங்களது உயரதிகாரிகளுக்கு சமர்ப்பித்துள்ளது. அதில், தமிழ் நாட்டின் டாப் டென் ரவுடிகளில் ஒருவரும், மதுரை அப்பளராஜா, பைக்காரா கருப்பு, மேலமாசி வீதி சரவணன், வி.கே குருசாமி, ரஞ்சித், ஜீவா, ஜான், ஈஸ்வரன், அழகிரி பேரவையின் மகேந்திரன், கண்ணன், திருமுருகன் உள்ளிட்டோர் என்கிறது அந்த லிஸ்ட்.
லிஸ்டில் உள்ள அத்தனை பேரும் குறைந்தப் பட்சம் ஒவ்வொருவரும் அரை டஜனுக்கும் குறைவில்லாமல் வழக்கு வைத்திருப்பவர்களே. " என்றார் உளவு அதிகாரி ஒருவர். போலீஸாரின் தொடர் கண்காணிப்பில் இருந்தாலும் இவர்களை சீர்ப்படுத்துவது சிரமம் என்றும், எப்பொழுதும் பெரும் தலைவலியாக இருக்கும் இவர்களைக் கொண்டே இவர்களை அழிப்பது என ஒருவரை ஒருவர் கொம்பு சீவிவிடும் செக்க சிவந்த வானம் திரைப்படப் பாணியை கையாளுகிறது காவல்துறை. அதன் விளைவு தான் சமீபத்தில் கொன்னவாயன் சாலையில் உள்ள மண்டபத்தில் அருகில் கொலையுண்ட கமலக் கருப்பையா என்ற கருப்பு. அதாவது அவருடைய எதிரியை வைத்தே அவரை அழித்துள்ளது காவல்துறை." என்பதால் பீதியில் இருக்கின்றனர் தாதாக்கள்.