ஊரில் தன்னுடன் அடிக்கடி மோதிக் கொண்டிருக்கும் பங்காளியிடம் பவுசு காட்டுவதற்காக, தன்னுடைய ஆதரவாளர்களைக் கூப்பிட்டு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடியின் வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வலம் வர விழிபிதுங்கி நிற்கின்றது காவல்துறை.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கண்டவராயன்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி. ஆரம்பத்தில் திருப்பத்தூரில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் வைத்திருந்த கார்த்தி, திருப்பத்தூர், கண்டவராயன்பட்டி, கீழக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சிறிது சிறிதாக ஆற்றுமணல் திருடி பெரியளவில் வளர 'பையா' கார்த்தியானார். அதன் பிறகு கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என அடுத்தகட்டத்திற்கு வளர கீழச்சிவல்பட்டி, கண்டவராயன்பட்டி, திருப்பத்தூர் மற்றும் திருக்கோஷ்டியூர் காவல்நிலையங்களில் இவன் மேல் புகார்கள் பதிவாகின.
இதில் திருப்பத்தூர் பகுதி தினசரி செய்தியாளரை மிரட்டிய வழக்கும் உண்டு. இவ்வேளையில், இவனுடைய சொந்த ஊரான கண்டவராயன்பட்டியில் எதிரியாய் உருவானான் சொந்த பங்காளியான ‘சீமான் முரசு.’ அதிலிருந்து ஊரில் கபடி, மஞ்சுவிரட்டு தொடங்கி அனைத்து நல்லது கெட்டதுக்கும் இருவரும் போட்டிப் போட்டு கொண்டு ஃப்ளக்ஸ், பேனர், நீர்ப்பந்தல் என பந்தாவிற்காக ஊரையே அமர்க்களப்படுத்துவதாக இருந்தனர். இதனால் இரு தரப்பும் அவ்வப்போது முட்டிக்கொண்டு காவல் நிலையம் சென்று சமாதானம் ஆகுவதும் அந்த ஊரில் வழக்கமான ஒன்று.
இந்நிலையில், தனது பிறந்த நாளான கடந்த 09/05/2019 அன்று தன்னுடைய கண்டவராயன்பட்டி இல்லத்தில், ஆதரவு ரவுடிகளைக் கூப்பிட்டு நீண்ட பட்டாக்கத்தியால் கேக்வெட்டி, அதனை வீடியோவாக்கி எதிர் தரப்பிற்கு அனுப்பியுள்ளது பையா கார்த்தி குழு. பவுசுக்காக எடுக்கப்பட்ட இந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி திருப்பத்தூர் தாலுகா முழுவதும் சுற்றிவந்த பின்னரே காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இந்த வீடியோவால் விழிபிதுங்கிய காவல்துறை சுதாரித்துக்கொண்டு ரவுடி பையா கார்த்தியைத் தேடி வருகின்றது.