![rowdy birthday police inspector celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/KefUBR1p4rStNS_4wxjfb_a-SJTo8KwSq-7nyEj-ghM/1605494723/sites/default/files/inline-images/salem%20new%20bus%20stand%20%282%29.jpg)
சேலம் அருகே, காவல் ஆய்வாளர் ஒருவர் ரவுடியுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் குறித்து தீர விசாரிக்குமாறு எஸ்பி தீபா கனிகர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (49). சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி, பணிக்குச் சென்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது பிறந்த நாளையொட்டி ஆய்வாளர் சுப்ரமணியம் விடுப்பு எடுத்துள்ளார். வாழப்பாடி பகுதியில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்பு உடைய சங்கர் என்ற ரவுடியுடன் ஆய்வாளர் சுப்ரமணியம் கேக் வெட்டி தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார்.
இந்தக் காணொளிப் பதிவு, சமூக ஊடங்களில் வேகமாகப் பரவியது. இந்த விழாவில், கரியகோயில் காவல்நிலையத்திற்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 காவலர்கள், 2 கார் ஓட்டுநர்கள் ஆகியோரும் இருந்துள்ளனர்.
இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்த வாழப்பாடி டிஎஸ்பிக்கு மாவட்ட எஸ்பி தீபா கனிகர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.