Skip to main content

என்கவுன்டர் பயம்: ரவுடி ஆனந்தன் சகோதரன் தற்கொலை முயற்சி!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018
row


காவலரை ஓடஓட வெட்டிய வழக்கில் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஆனந்தனின் சகோதரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை தலைமை காவலர் ராஜவேலுவை கடந்த திங்கள்கிழமை இரவு ராயப்பேட்டை பிஎம்.தர்கா அருகே 10 ரவுடிகள் ஒன்று சேர்ந்து ஓட ஓட வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக ரவுடிகள் ஆனந்தன், அரவிந்தன், ஜிந்தா, அஜித்குமார் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில், உதவி ஆய்வாளர் இளையராஜாவை ரவுடி ஆனந்தன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றதால், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சனன் தற்காப்புக்காக ரவுடி ஆனந்தனை துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி ஆனந்தன் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காவலர் தாக்கிய வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட ஆனந்தனின் சகோதரன் அருண்(எ)புலி அருணை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் புலி அருண் அளித்த தகவலின் படி தான் தலைமறைவாக இருந்த ரவுடி ஆனந்தன் போலீசார் சோழிங்கநல்லூரில் கைது செய்ததாக கூறப்படுகிறது.
 

 

 


இதற்கிடையே சகோதரனின் பெயரை சொல்லி புலி அருண் அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவன் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளது. எனவே தனது சகோதரனை போல், தன்னையும் போலீசார் என்கவுன்டர் செய்து விடுவார்களே என்ற அச்சத்தில் புலி அருண் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைபார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து புலி அருணை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் புலி அருணுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, புலி அருண் மீது சில வழக்குகள் இருப்பதால் அதில் நாங்கள் கைது செய்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அவர் இதுபோன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்