புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில் உள்ள பரமந்தூர் கிராமத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஏராளம் உள்ளனர். அதில் ஒருவர் தான் செல்லையா - சொர்ணவள்ளியின் மகன் தங்கராசு. 10 ஆண்டுகளுக்கு முன்பு திருணமாகி முதல் குழந்தையாக பாண்டி பிறந்தான். அடுத்த குழந்தை பிரசவத்தின் போது தங்கராசுவின் மனைவி உயிரிழந்தார்.
அதன் பிறகு தங்கராசு வேலைக்கு போவதை குறைத்துக் கொண்டு கிடைக்கும் பணத்தில் போதை ஏற்றிக் கொண்டும் தன் தாய் மகனைக் கூட கவனிப்பதில்லை. இதனால், தாயை இழந்த பேரன் பாண்டியை இதுவரை கூலி வேலை செய்து, சாப்பாடு போட்டு அங்குள்ள அரசுப்பள்ளியில் படிக்க வைத்தும் வந்துள்ளார் பாட்டி சொர்ணவள்ளி.
ஆனாலும், வறுமை ஒருபக்கமும் மகனின் போதை மறுபக்கமும் வாட்டி வதைக்க வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்த பாட்டி சொர்ணவள்ளி தான் இறந்த பிறகு பேரன் அனாதையாக்கப்படுவான், கஞ்சிக்கு கூட யாரிடமாவது கையேந்தி நிற்பான் என்பதை நினைத்து எலி மருந்து விஷம் வாங்கி வந்து பாட்டியும், பேரனும் அருந்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் குத்துயிரும் குலையுயிருமாக கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தும் பயணில்லை இரு உயிர்களும் பிரிந்தது.
இவர்களது இறுதிச் சடங்கு செலவுகளுக்கு கூட பணமின்றி தவிக்கும் குடும்பத்திற்கு உறவினர்களே எல்லாம் செய்து வருகின்றனர். வறுமையும், போதையும் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டதை நினைத்து பலரும் கண் கலங்கி நிற்கின்றனர்.