பொது நிதிநிலை அறிக்கையைத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (13.08.2021) சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறை பட்ஜெட்டை வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறைகளுக்கான பல்வேறு ஒதுக்கீடுகளை அமைச்சர் வாசித்தார். அதன்பின் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ''100 நாட்கள் ஆட்சி குறித்து சபையில் இருக்கும் நீங்கள் எவ்வளவு பாராட்டினாலும் எனக்கு, அடுத்துவரும் காலம் பற்றிய நினைப்பே அதிகம் இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்'' என உரை நிகழ்த்தினார்.
நேற்று பொது நிதிநிலை அறிக்கை தாக்கலின்போதே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், திமுக சொல்வதொன்று செய்வதொன்று என விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி கானல்நீரா? சொல்வதொன்று செய்வதென்றுதான் திமுகவின் வாடிக்கையாக இருக்கிறது'' எனக் கூறியுள்ளார். அதேபோல் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, ''பயிர்க்கடன், நகைக்கடன்களைத் தமிழக அரசு உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.