சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் வீட்டில் சினிமா மேக்கப் கலைஞர் ஒருவர் நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்று மாறுவேடத்தில் சுற்றிய நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் முருகன். இவரது மனைவி சரோஜா. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு வழக்கறிஞரின் மனைவி சரோஜா, பள்ளியில் உள்ள அவரது குழந்தையை அழைத்து வரச் சென்றுள்ளார். மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரோஜா கணவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
அப்பொழுது வீட்டில் மறைந்திருந்த கொள்ளையன் ஒருவன் சரோஜா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த மூன்று பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளார். உடனடியாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கொள்ளை போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராக்களில் இருந்து கைப்பற்றப்பட்ட காட்சிகளின் அடிப்படையில் ஆனந்த் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆனந்த் கடந்த 2016 ஆம் ஆண்டு சினிமா ஆசையுடன் சென்னை வந்ததும், அதன் பிறகு சினிமாவில் குரூப் டான்ஸ் மற்றும் சின்னத்திரை துணை நடிகர்களுக்கு மேக்கப் போடும் வேலை செய்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. மது போதைக்கு அடிமையான ஆனந்த் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் பணத்திற்காகக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதும் தெரிய வந்தது. கடந்த இரண்டு நாட்களாக வழக்கறிஞரின் வீட்டினை நோட்டம் விட்ட ஆனந்த் இந்தக் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். கொள்ளையடித்த பின்பு தனது மேக்கப் உத்தியைப் பயன்படுத்தி மொட்டை அடித்துக் கொண்டு முக பாவனைகளை மாற்றிக்கொண்டு சுற்றித் திரிந்தது தெரிய வந்தது.