திருவாரூர் அருகே வீடு வாடகை கேட்பது போலவந்து வீட்டில் இருந்த தம்பதியருக்கு விஷம் கொடுத்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. விஷம் அருந்திய தம்பதியரில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சி விஷ்ணுத்தோப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதியர், செல்லப்பிள்ளை அரவது மனைவி சகுந்தலா. செல்லம்பிள்ளைக்கு சொந்தமான மற்றொரு காலியாக உள்ள வீட்டை வாடகைக்கு கேட்டு ஐந்து தினங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அதே நபர் மீண்டும் வீடு வாடகைக்கு கேட்டுவந்துள்ளர். அச்சமயம் உடல்நலக்குறைவால் வீட்டிற்குள் படுத்திருந்த சகுந்தலாவிற்கு தன்னிடம் மருந்து இருப்பதாக கூறி, அதனை அருந்தச் சொல்லி வழங்கியுள்ளார். மேலும் அதே மருந்தை செல்லம்பிள்ளைக்கும் வழங்கியுள்ளார்.
அந்த மருந்தை அருந்திய சகுந்தலாவும் செல்லபிள்ளையும் மயக்க நிலைக்குசென்றுள்ளனர். இதனை அடுத்து அந்த மர்ம நபர் சகுந்தலா கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க நகையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளான். பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் தம்பதியர்கள் இருவரும் படுத்துக்கிடப்பதை பார்த்துவிட்டு சந்தேகித்து விசாரித்தபோது அரைமயக்கத்திலிருந்த செல்லபிள்ளை மருந்து கொடுத்ததால் ஏற்பட்ட நிலை குறித்தும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தம்பதியர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த சம்பவத்தில் சகுந்தலா சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள செல்லபிள்ளைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷம் கொடுத்துவிட்டு நகையை திருடிசென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம்குறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தோம்," தம்பதியினர் இரண்டு பேரும் தனியாக இருப்பதை தொடர்ந்து நான்கு பேர் கண்காணித்துள்ளனர். இருவரும் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், யார் யார் அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து வீடு கேட்பது போல் முதல் தடவை சென்றுள்ளனர். அவர்கள் போட்டிருக்கும் நகைகள், வீட்டில் வைத்திருப்பது உள்ளிட்டவைகளையும் என்பதையும் நன்கு கண்காணித்துள்ளனர். நேற்று முன் தினம் இருவருக்கும் காய்ச்சல் இருப்பதை தெரிந்துகொண்டே அரசாங்க மருத்துவமனையில் வழங்கும் கசாயத்தில் விஷத்தையும் கலந்துகொடுத்துள்ளனர், மயங்கிய நிலையில் இருந்தபோது நகைகளை திருடிசென்றுள்ளனர், அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம்",என்கிறார்கள்.