
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர், அண்ணா சாலை மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் வெண்ணிலா. இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வெண்ணிலா பணிக்கு சென்றுள்ளார். பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அங்கு வைத்திருந்த 27 பவுன் நகை மற்றும் ரூ.25ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து வெண்ணிலா திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் டி.எஸ்.பி. அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பட்டப் பகலில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.