நான்கு மாதங்களாக தூக்கத்தை இழந்து பல்வேறு அவதிகளை பட்டு சாகுபடி செய்யப்பட்டது, அறுவடை இயந்திரம் கிடைக்காமல் கைக்கு வராமலேயே வயலோடு போய்விடுமோ என்கிற மனவேதனையில் உறைந்திருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் மனதில் அம்பை பாய்ச்சுவதுபோல, அறுவடை இயந்திர பற்றாக்குறையே இல்லை, என்று ஒரு பொய்யை கூச்சமே இல்லாமல் கூறியிருக்கிறார் அதிமுக அமைச்சர் ஓ,எஸ்,மணியன் என ஆதங்கபடுகிறார்கள் விவசாயிகள்.
விவசாயிகளிடம் இந்த கோபம் எதற்கு என்பதை விசாரித்தோம். அப்போது" பல வருடத்திற்குப் பிறகு பருவமழையும், ஆற்றுப்பாசனமும் நல்லமுறையில் கைகொடுத்ததால் சாகுபடி நல்ல நிலைமையில் நடந்திருக்கு. ஆனால் வழக்கமாக ஜனவரி மாதத்திற்குள் அறுவடை செய்யவேண்டிது இயந்திர பற்றாக்குறையால் சாய்ந்து பணி ஈரத்தில் முலைக்கத்துவங்கிவிட்டது. ஒவ்வொரு கிராமத்திற்கும் குறைந்தது ஐந்து கதிர்அறுக்கும் இயந்திரமாவது வந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு ஒரு ஊராட்சிக்கு ஒரு வண்டி கூட கிடைக்கவில்லை. அதற்கு காரணம் தமிழகத்தைப்போலவே காவிரி தண்ணீரைக்கொண்டு கர்நாடகாவிலும், அதிக விளைச்சல் விளைந்திருக்கு, அங்கு இயந்திரத்திற்கு மணிக்கு மூவாயிறம் ரூபாய் கிடைக்கிறது என அனைத்து இயந்திரங்களும் அங்கே சென்று விட்டன, ஆனால் இங்குள்ள மாவட்ட ஆட்சியர்களும், அமைச்சர்களும் மணிக்கு 1600 ரூபாய் என செய்திதாள்கள் மூலம் அறிவித்ததால் அனைவருமே அதிக பணம் கிடைக்கும் அன்டை மாநிலத்திற்கு சென்றுவிட்டன. அறிவிப்பை வெளியிட்டவர்கள் இயந்திரத்திற்கான ஏற்பாடை செய்யாமல் விட்டுவிட்டனர்.
இங்குள்ள அமைச்சர்களும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்கள். கடந்த காலங்களில் டெல்டா மாவட்டங்களில் விளைச்சல் அதிகம் இருப்பதை காட்டிக்கொள்ள வெளிமாநிலத்தின் நெல்லை இறக்கி அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து கணக்கு காட்டுவார்கள். அதுபோலவே இந்த ஆண்டு இயந்திரம் கிடைக்காமல் கலங்கிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் தை மாதம் துவங்கி மாசி மாதத்திற்குள் அறுவடை முடிந்து விடும் ஆனால் இன்னும் பல கிராமங்களில் அறுவடையே துவங்கவில்லை இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல். விழாவுக்கு வந்த அமைச்சர் ஓ,எஸ்,மணியன் இதுபோன்ற பொய்யான பிரச்சாரத்தை செய்வது கண்டிக்கத்தக்கது.
இவர் கஜா புயலின் போது பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் இல்லை என்று கூறி வாங்கிக்கட்டிக் கொண்டார். பிறகு தான் வரலாறு காணாத பேரழிவை கண்டிருந்ததை அவர் உணர்ந்தார். அதுபோல்தான் எந்த ஒரு ஆய்வையும் செய்யாமலேயே இப்படி ஒரு பொய்யைச் சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்," என்று எரிச்சலடைகிறார்கள். அப்படி என்னதான் கூறினார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் என்று பார்ப்போம். நாகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர், "இந்தியாவில் பெரிய மாநிலங்களில் முதன்மையான மாநிலம் தமிழகம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது தமிழகத்தின் சிறப்பான வேளாண் உற்பத்தி. வேளாண் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பெற்று ஐந்துமுறை விருது பெற்று இருப்பது சிறப்புக்குரியது.அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான அறுவடை இயந்திரங்கள் அனைத்தும் டெல்டா மாவட்டங்களில் தான் இயங்கி வருகின்றன. சம்பா நெல் அறுவடை பணிகளுக்கான இயந்திர தட்டுப்பாடு இங்கு இல்லை. எந்த இடையூறும் இல்லை," என வாய் கூசாமல் கூறியதுதான் அவர்களின் கோபத்திற்கான காரணம்.