மயிலாடுதுறை அருகே உள்ள வடகரை ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் உள்ள உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி வடகரை கிராமம். அங்கு ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் விடியற்காலை மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றிருக்கின்றனர். உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு பள்ளிவாசலில் தூங்கிக் கொண்டிருந்த சிலர் கூச்சலிட்டபடி அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், திருடவந்தவர்களோ கையில் வைத்திருந்த கடப்பாரையை காட்டி குத்தி விடுவேன், சொருகிவிடுவேன் என மிரட்டிக்கொண்டே பணத்துடன் தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது, செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நாகையிலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிட்டனர். ஆனால், அது ஒருபயனும் அளிக்கவில்லை. இதனையடுத்து பள்ளிவாசல் அருகே உள்ள வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் பதிவாகியுள்ள உருவத்தை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அதோடு கைரேகை நிபுனர்களை வரவழகைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.
அங்குள்ள பள்ளிவாசலில் உள்ள உண்டியல் வருடத்திற்கு ஒருமுறை திறக்கப்படுவது வழக்கம் எனவே உண்டியல் திறக்கும் நாளுக்கு இந்த திருட்டு நடந்துள்ளது. இதேபோன்று இரண்டு நாட்களுக்குமுன் வடகரை அடுத்துள்ள அரங்கக்குடி பள்ளிவாசலிலும் மற்றும் மயிலாடுதுறை அருகே உள்ள தேரழுந்தூர் பள்ளிவாசலிலும் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருக்கிறது. அதே பாணியில் இந்த திருட்டும் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சிகலந்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது.