கோடை வெப்பத்தையும் விட தேர்தல் வெப்பம் அனல் பறக்கத் துவங்கியுள்ளது. வெற்றி மட்டுமே தங்களின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் என்பதால் கச்சைக்கட்டிக்கொண்டு களத்தில் சுழன்றபடி இருக்கின்றன கழகங்கள். அதிமுக, திமுக கட்சிகளுக்கு சவாலாக இருப்பார் என பரபரப்பாக சொல்லப்பட்ட டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. தொண்டர்களோ சுறுசுறுப்பில்லாமல் சோர்ந்து போயிருக்கிறார்கள். வைட்டமின் ’ ப ’ இன்னும் வந்து சேராததால் அக்கட்சியினர் மத்தியில் வேகம் அதிகரிக்கவில்லை. அ.ம.மு.க. சார்பில் களத்தில் நிற்கும் வி.வி.ஐ.பி. வேட்பாளர்கள் தொகுதிகளில் மட்டும் வேகம் தெரிகிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தினகரனின் வீட்டுக்குச் சென்று கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டு தினகரனுக்கு எதிரான அதிரடியை கிளப்பியிருக்கிறார் தென்சென்னை வடக்கு மாவட்ட அ.ம.மு.க.வின் துணை செயலாளர் வைத்தியநாதன். இவரைப் போல தமிழகம் முழுவதும் பதவிகளை ராஜினாமா செய்யும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் தினகரனின் தொண்டர்கள். ராஜினாமா செய்த பலர், திமுகவில் இணைந்து வருகின்றனர்.

தினகரனுக்கு எதிராக வாள் சுழற்றியுள்ள வைத்தியநாதனை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, ‘’ தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த கலைராஜன், திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைவதற்காக திருச்சிக்கு கலைராஜன் புறப்பட்டு விட்டார் என அறிந்ததும், அவர் இணைவதற்கு முன்பாக கட்சியை விட்டு நீக்க வேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல் கொடுத்த யோசனையின்படி கலைராஜனை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டார் தினகரன்.

நீக்கியதுடன் கலைராஜன் இருந்த பதவியில் சுகுமார்பாபுவை நியமித்தார் தினகரன். இது, என்னைப் போன்ற கழகத்தின் மூத்த நிர்வாகிகளை கோபப்பட வைத்தது. முறைப்படி புதிய மா.செ.வாக என்னைத்தான் நியமித்திருக்க வேண்டும். அல்லது மாவட்ட கழகத்தில் உள்ள நிர்வாகிகளை அழைத்து விவாதித்திருக்க வேண்டும். இதை எதையும் செய்யாமல், வெற்றிவேல் சொல்கிறார் என சுகுமார்பாபுவை நியமித்தார். இப்பதவியில் நியமிக்கும் வரை சுகுமார்பாபு எங்கிருந்தார் என்பதே யாருக்கும் தெரியாது. கட்சியோடு தொடர்பில்லாதவரை எப்படி பெரிய பதவியில் நியமிக்கலாம்? எல்லாம் பணம் படுத்தும்பாடு ! கட்சிக்காக உழைக்கவும், கொடி பிடிக்கவும், போஸ்டர் ஒட்டவும், காசு-பணம் செலவழிப்பதும் என்னைப் போன்ற அடிமட்ட தொண்டர்கள். ஆனால், கட்சி பதவி மட்டும் முறைவாசல் செய்பவர்களுக்கா?
அதே சமயம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனது சாதியின் அடையாளமாகவே நடத்திக்கொண்டிருக்கிறார் தினகரன். மாநில பொறுப்புகள் தொடங்கி கீழ்நிலை பொறுப்புகள் வரை 90 சதவீதம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமைத் தரப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். மாற்று சமூகத்தினரை தினகரன் அரவணைப்பதில்லை. குறிப்பாக, வன்னியர் சமூகமானாலே அவருக்கு எட்டிக்காயாக இருக்கிறது. ஆனால், கட்சிக்கு செலவு செய்ய மட்டும் அவர்களை பயன்படுத்திக்கொள்கிறார் தினரகரன். இதனால், முக்குலத்தோர் தவிர அனைத்து சமூகத்தைச் சேர்ந்த தொண்டர்களும் தினகரன் மீது வெறுப்பில் இருக்கிறார்கள். சாதி கட்சி நடத்தும் தினகரன், பேசாமல், அ.ம.மு.க. கட்சியை முக்குலத்தோர் முன்னேற கழகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

மேலும் இன்றைய சூழலில் தினகரன் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. வெற்றிவேலிடம் அடகு வைத்துள்ளார் தினகரன். வெற்றிவேல் சொல்வதை மட்டுமே நிறைவேற்றுகிறார் அவர். தமிழகம் முழுவதும் கட்சி பதவியில் யார் இருக்க வேண்டும் ? யார் இருக்கக்கூடாது ? என வெற்றிவேல்தான் தீர்மானிக்கிறார். அவரது கட்டளையை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் தினகரன், அதற்கேற்ப கட்சியனரை நீக்கவும் சேர்க்கவும் செய்து வருகிறார். இதனையெல்லாம் ஜீரணிக்க முடியாமல்தான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.
அதிமுக பிளவுப்பட்டதற்கு தினகரன் தான் காரணம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட வேண்டாம் என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்தினர். அதை ஏற்று இவர் போட்டியிடாமல் தவிர்த்திருந்தால் அதிமுக உடைந்திருக்காது. நான் தான் போட்டியிடுவேன் என சர்வாதிகாரத்தனமாக முடிவு செய்து தேர்தலில் குதித்தார்.
தினகரன் ஜெயித்தால் முதல்வராகி விடுவார் என பாஜகவுக்கு சொல்லப்பட்டது. அதனால் கட்சியை உடைத்தது பாஜக. தினகரன் தனி மரமானார். சில எம்.எல்.ஏ.க்களை வளைத்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களின் சமயோஜித முடிவுகளால் தினகரனின் திட்டம் தவிடுபொடியானது. எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டவர்களை வைத்து தனிக்கட்சி துவக்கி, தற்போது முக்குலத்தோர்க்கான சாதி கட்சி நடத்தி வருகிறார் தினகரன்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உண்மையான நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் விருப்பம் இல்லை. இதனை ஏற்க மறுத்து, தேர்தலில் கட்சியை இறக்கிவிட்டுள்ளார் தினகரன். இதற்கு பின்னணியில் மிகப்பெரிய திட்டம் இருக்கிறது. அதாவது, பாஜகவின் பினாமி ஆட்சியாக இபிஎஸ், ஓபிஎஸ் இருப்பதாக திட்டுகிறார் தினகரன். ஆனால், உண்மையில் பாஜகவின் பினாமியாக அரசியல் செய்வது தினகரன்தான்.
பாஜகவை கடுமையாக எதிர்ப்பதும் விமர்சிப்பதும் திமுக-காங்கிரஸ் கூட்டணிதான். இக்கூட்டணியின் ஓட்டு வலிமையை குறைக்க வேண்டுமென்பது பாஜகவின் திட்டம். இதனை செயல்படுத்த பாஜக தலைமை எடுத்த, எடுப்பார் கைப்பிள்ளைதான் தினகரன். அதாவது, அதிமுக-பாஜக கூட்டணியால் தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த கிறுஸ்தவர்களும், முஸ்லீம்களும் திமுக கூட்டணியை ஆதரிப்பதில் தெளிவாக இருக்கிறார்கள். பாஜகவுக்கு எதிரான மத சிறுபான்மையினரின் இத்தகைய வாக்குகள் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பலம். அதனால் சிறுபான்மையினரின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லக்கூடாது என திட்டமிடுகிறது பாஜக தலைமை. திமுக கூட்டணிக்கு செல்லும் அந்த வாக்குகள் தடுக்கப்பட்டால்தான் அதிமுக-பாஜகவுக்கு வெற்றிகிடைக்கும் என பாஜக தலைமைக்கு தகவல் தரப்பட்டுள்ளது.
திமுக கூட்டணிக்குச் செல்லாமல் அந்த வாக்குகள் மடை மாற்றம் செய்யப்பட வேண்டுமென்பதே பாஜகவுன் ஒன் லைன் அஜெண்டா ! ஆக, அந்த வாக்குகளை மடைமாற்றம் செய்ய, மக்கள் அறிந்த முகம் ஒன்றும் பாஜகவுக்கு தேவைப்பட்டது. அந்த முகம்தான் தினகரன். அதனாலேயே, திமுகவுக்கு இணையாக பாஜகவை விமர்சிக்குமாறு தினகரனுக்கு அசைண்மெண்ட் கொடுத்தது பாஜக ! அப்படி அதிகப்படியாக திட்டினால்தான் பாஜக-அதிமுகவுக்கு எதிரான முஸ்லீம், கிறுஸ்துவ வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் தினகரனுக்கு செல்லும். அப்படி வாக்குகள் பிரிவது தங்களுக்கு சாதகம் என திட்டமிட்டு தினகரனை வளைத்தனர். தினகரனும் இதற்கு உடன்பட்டார். அதற்கேற்ப அவரும் கடுமையாக அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்து வருகிறார்.
அதனால்தான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கட்சியின் 90 சதவீத நிர்வாகிகள் வலியுறுத்தியும் அதனை ஏற்காமல் தேர்தலில் குதித்துள்ளார் தினகரன். அவரின் இந்த முடிவுக்கு பாஜகதான் காரணம். பாஜக அசைண்மெண்டின் ‘ பி ’ டீமாக தினகரன் மாறியிருக்கிறார் என்பது தினகரனின் மோ(ச)டித்தனம் ! ‘’ என்றார் அதிரடியாக.
தினகரனின் ’மோடி‘யிசம் மெல்ல மெல்ல கிழியத்துவங்கியுள்ளது !