கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் உள்ள ஊழியர் குடியிருப்பில் தங்கி இருக்கும் 10 பேரின் செல்போன்கள் திடீரென காணாமல்போனது.
இதையடுத்து அந்த குடியிருப்பில் வசித்துவரும் அகஸ்டின் என்பவர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவலர்கள் செல்லபாண்டி, பழனிகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிந்தாமணிபுதூர் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 வட மாநில இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதனால், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த குமார் மாலிக் (26), பிரதாப் மாலிக் (22), ராஜேஷ் மாலிக் (26), மானஸ் மாலிக் (33) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் கண்ணம்பாளையம் பகுதியில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் ரூபாய் பத்தாயிரம் ரொக்கம் மற்றும் 1. 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்து ஆண்ட்ராய்டு போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, குற்றவாளிகள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.