விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவர் வியாபாரத்தை முடித்துவிட்டு கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே காரை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
திடீரென கண்விழித்துப் பார்த்தபோது அவரது காரை காணவில்லை. இதையடுத்து அருகே உள்ள கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். மேலும் அந்த காரில் தனது ரூபாய் 10,000 ரொக்கம் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை வைத்திருந்தாக தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்ற போலீசார் உடனடியாக மாவட்டம் முழுவதும் தகவல் தெரிவித்து போலீசாரை உஷார் படுத்தினர். இதற்கிடையே எலவனாசூர் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் எலவனாசூர்கோட்டை திருக்கோயிலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்த தகவல் வந்ததும் அனைத்து கார்களையும் சோதனை செய்யலாம் என்று முடிவெடுத்தபோது, அப்போது கடத்தப்பட்ட கார் அவர்களுக்கு எதிரே வருவதை பார்த்துவிட்டு காரை வழி மறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து அந்த காரை போலீசார் பின்தொடர்ந்தனர். சுமார் 20 நிமிடம் சினிமா பாணியில் அவர்களை சேசிங் செய்து காரை மடக்கி நிறுத்தினார்கள்.
அப்போது காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிய கார் டிரைவரை கையும் களவுமாக கைது செய்து, விசாரணைக்கு பிறகு கள்ளக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.