மத ரீதியான நிகழ்வுகளைத் தடை செய்ய அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் நாரயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தங்கள் ஊரில் விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன் என்ற மூன்று கோவில்கள் உள்ளதாகவும், இந்தக் கோவில்களை பிற்படுத்தப்பட்ட மக்கள் நிர்வகித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 200 ஆண்டுகளாக கோவில் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது என்றும், ஊரின் அனைத்து தெருக்கள் வழியாக தேர் இழுத்து வழிபாடு நடத்துவது வழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2007- ஆம் ஆண்டு தேர்த் திருவிழாவில் முதல் மரியாதை செய்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தேர் பவனி நிறுத்தப்பட்டது. அந்தத் தேரை இழுத்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வருவாய் வட்டார அலுவலர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண உத்தரவிட்டார்.
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மத ரீதியான நிகழ்வுகளின்போது வழிபாடு செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. வழிபாடு நிகழ்வுகளின் போது பிரச்சனை ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்த, ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. வழிபாட்டைத் தடை செய்ய அதிகாரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் அந்த ஊர் மக்களுடன் பேசி தேர்த்திருவிழாவை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.