ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாகவே கஞ்சா, போதை மருந்து கடத்தல் உள்ளிட்டவைகள் கொடிக்கட்டி பறக்கின்றன. சமூக விரோத செயலில் ஈடுபடும் தாதாக்கள் மூலம் மாதந்தோறும் கிடைக்கும் மாமூலால் காவல்துறையும் ஏனோ அதனைக் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றன. ஏதாவது ஒன்றிரண்டு புகார்கள் மாவட்ட எஸ்.பி.க்கு செல்ல கூலியாட்கள் சிலரை மட்டும் கணக்கிற்காக கைது செய்வதனை வழக்கமாக கொண்டுள்ளது கீழக்கரை காவல்துறை துணைச்சரகம். மக்களுக்கும் இது வழக்கமான ஒன்றாக இருந்த நிலையில் சமீபத்தில் நடந்த இரண்டு கொலைகள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கீழக்கரை நகராட்சி முழுக்க கஞ்சா வியாபாரத்தில் தன் ஆளுமையை செலுத்தியுள்ள புதுத்தெருவினை சேர்ந்த இம்ரான்கான் சமீப காலமாக காணாமல் போன லிஸ்டில் இருக்க, இது தொடர்பாக கீழக்கரை காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி புகார் அளித்தும் போலீசார் வழக்கம் போல் கண்டும் காணாமல் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினை அளித்திருந்தனர் அவரது உறவினர்கள். ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வேறு வழியில்லாமல் வழக்கை துரிதமாக கையிலெடுத்த கீழக்கரை போலீசார் மற்றொரு கஞ்சா வியாபாரியான சாகுலை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், 'கஞ்சா வியாபாரத்தில் " தான் மட்டுமே நெ.1 ஆக இருக்க வேண்டுமென்பதற்காக இம்ரான்கானை கொலை செய்து கடற்கரையோரத்தில் புதைத்துள்ளதாக ஒப்புக்கொண்டு சம்பவ இடத்தினையும் காண்பித்தார் சாகுல். போலீசாரும் உடலைக் கைப்பற்ற, தடயவியல் நிபுணர்கள் பிணக்கூராய்வு செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட இம்ரான்கான் கடந்த சில மாதங்களுக்கு முன் இதே கஞ்சா வியாபாரப் போட்டியில் சக கஞ்சா வியாபாரியான லுக்மான் என்பவரை கொலை செய்தது குறிப்பிடத்தக்க ஒன்று. கஞ்சா வியாபாரப் போட்டியில் அடுத்தடுத்து விழும் கொலைகளால் கீழக்கரை அமைதியிழந்துள்ளது. இதனை சரி செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை..! சரி செய்வார்களா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.