திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட கான்கிரீட் சாலையானது அரை மணி நேர மழைக்கே கரைந்து ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆரணி புறநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டது. அதன்படி ஏற்கனவே இருந்த சாலையின் அளவை கணக்கெடுக்காமலும், அதே நேரம் பழைய சாலையை தோண்டி எடுத்துவிட்டு சீரமைப்பு செய்யாமலும் அதன் மேலேயே சிமெண்ட் மற்றும் கற்களால் சாலை அமைத்ததாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை சாலை அமைக்கப்பட்ட பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அந்த கான்கிரீட் சாலையானது கரைந்து ஓடியது. தரமான சாலை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.