பொதுமுடக்க வேளையில் இ.எம்.ஐ கட்ட ஓராண்டு நீட்டிக்க வேண்டும், தவணை கட்டாத வாகனங்களைப் பறிமுதல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஈரோடு மாவட்ட சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஈரோடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு, ஈரோடு மாவட்ட சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் யூனியன் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் யூனியன் தலைவர் பாலு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், சாலைப் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் கனகராஜ் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராகக் கோஷமிட்டதோடு, கோரிக்கைகளை கூறினார்கள்.
அவர்களின் கோரிக்கைகள் வருமாறு, "அரசு அமல்படுத்திய கரோனா கால பொதுமுடக்கம் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையை முழுமையாகப் புரட்டிப் போட்டுவிட்டது. குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் உணவு சாப்பிடுவதற்கே வருமானம் இல்லாத வேதனையான நிலைக்குத் தள்ளப்பட்டோம், இதில் வாங்கிய கடனை எங்கே கட்டுவது அதற்காகத்தான் கூறுகிறோம், மோட்டார் வாகனங்களுக்குப் பெறப்பட்டுள்ள கடன் தவணைகள் (இ.எம்.ஐ) கட்டுவதற்கு ஓராண்டுகாலம் நீட்டிப்பு வழங்க வேண்டும். தவணை கட்டாத வாகனங்களைப் பறிமுதல் செய்யக்கூடாது. வானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி ஃஎப்.சி செய்து கொடுக்க வேண்டும்.
கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களின் சாலை வரியை ரத்துசெய்ய வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஓராண்டு காலம் வாகனங்களுக்கான காப்பீட்டை நீட்டிப்பு செய்து வழங்க வேண்டும். ஆண்டுக்கு இருமுறை டோல்கேட் கட்டணங்களை உயர்த்த அனுமதிக்கக் கூடாது.” எனக் கூறியதோடு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.