தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே. நகர் தொகுதிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலின்போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அப்போதைய அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இடைத்தேர்தலின் போது 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பணப்பட்டுவாடாவைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வேட்பாளர் மருது கணேஷும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவரும் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து சிபிஐயை பிரதிவாதியாக சேர்த்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போதைய அதிமுக அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இதற்கு தடை உத்தரவும் பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருது கணேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பணப்பட்டுவாடா புகாரை மாநில போலீசாரே விசாரிக்குமா, சிபிஐ விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் தடையை நீக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா எனக் கேள்விகளை முன் வைத்தார்.
இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள், ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான புகாரை மாநில போலீசாரே விசாரிப்பார்களா என்பது குறித்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.