கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வள்ளி. இவர்களது வீடு பெண்ணை ஆற்றின் கரை பகுதியில் உள்ளது. வீட்டுக்கு பின்புறம் உள்ள பெண்ணை ஆற்றுப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார் வள்ளி. அப்போது அப்பகுதியில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது.
அதை கேட்டு திடுக்கிட்ட வள்ளி சத்தம் வந்த ஆற்றங்கரையோர பகுதியில் சென்று பார்த்தார். பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையின் அழுகுரல் என தெரிய வந்தது. திடுக்கிட்ட அவர் குழந்தையை பார்த்து பரிதாபப்பட்டு அக்கம்பக்கத்தினர் உதவியோடு உடனடியாக திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் சக போலீசாருடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண் குழந்தையை மீட்டு, உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் போலீசார் குழந்தை இப்படி ஆற்றில் வீசிவிட்டு சென்றது தொடர்பாக அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். உடனடியாக அவரை காவல் நிலையம் கொண்டு சென்று நடத்திய விசாரணையில் அந்தப் பெண் திருக்கோவிலூர் அருகே உள்ள மிளாரி பட்டு கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது மனைவி (32 வயது) சுபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பெண் போலீஸாரிடம் கூறியதாவது, தனக்கும் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்களம் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த பத்து வருடத்திற்கு முன்பு திருமணம் ஆனது. எங்களுக்கு கலைவாணன் என்ற ஆண் பையன் உள்ளான். எனது கணவர் முத்து சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். அவர் அங்கேயே வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தற்போது அவர் என்னையும், எனது ஆண் குழந்தையையும் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை. இதனால் நான் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன்.
இந்நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 15ஆம் தேதி தனக்கு இரண்டாவதாக இந்த பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு சொந்த ஊரான மிளாரி பட்டுக்கு வந்தேன். ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. அதையும் சரிவர எனது கணவர் கவனித்துக் கொள்ளவில்லை. இந்த குழந்தையை எப்படி வளர்ப்பது என நினைத்து ஆற்றில் வைத்துவிட்டு வந்தேன். யார் கண்ணிலாவது இந்த குழந்தை பட்டு அவர்கள் தூக்கிச்சென்று குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பார்கள் என்ற எண்ணத்தில் அங்கேயே குழந்தையை விட்டுவிட்டு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தையையும், அவரது தாயையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தையை அவரது தாயாரே ஆற்றோரத்தில் விட்டுச் சென்ற சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.